மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...!மியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 6½ லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த தாக்குதல்களின்போது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரே சவக்குழியில் புதைக்கப்பட்டனர்.

இது கடந்த பிப்ரவரி மாதம் வெளி உலகுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தியது. அதில், 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் 3 வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது, இதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة