மனிதகுல அழிவிற்கான மறைமுக எச்சரிக்கையே “சூடான்” இன் மறைவு!உலகில் வாழும் உயிரினங்களில் ஏதோ ஒரு விலங்கு அழிவடைந்து சென்றுள்ளதென எவரும் சிந்திக்காது இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் மனித குலத்தின் அழிவும் அறியாமலேயே நிகழ்ந்து விடும். எனவே உலகில் அழிந்துவரும் உயிரினத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், விலங்குகளின் அழிவு மனிதகுலத்திற்கான எச்சரிகையாகவே அமையும். “சூடான்” என்று அனைவராலும் அறியப்பட்ட வெள்ளை ஆண் காண்டாமிருகம் அண்மையில் உயிரிழந்தது. 

இதன் மறைவு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் பல்வேறு வகையிலான எச்சரிக்கைகளை விடுத்தனர். அதாவது மனிதர்கள் உயிர் வாழக்கூடிய வகையில் பூமியின் சமநிலையை பேணுவதில் வனாந்தரங்களைப் போன்று அதில் வாழும் விலங்கினங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. அவ்வாறு வாழ்ந்து அழிந்த ஒரு இனத்தின் இறுதி ஆண் மகனாகவே “சூடான்” என்ற வெள்ளை காண்டாமிருகம் திகழ்கின்றது.

சரி இந்த காண்டாமிருகம் என்றால் என்ன ?

காண்டாமிருகம் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் யானையைப் போன்ற மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றும் தாவர உண்ணியும் கூட. தடித்த தோலும் பருத்த உடலும் பெருமளவு எடையையும் கொண்ட இப்பெரிய விலங்கு மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடவல்லது. இதனது ஆயுட்காலம் ஏறத்தாழ 60 ஆண்டுகள். எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லவை.

இந்த காண்டாமிருகங்கள் இயற்கையில் ஆபிரிக்க கண்டத்திலும் இந்தியா, ஜாவா, மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே இவை தற்போது உயிர்வாழ்கின்றன. ஆபிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகளும் ஆசிய கண்டப்பகுதியில் இந்தியா, ஜாவாவில் வாழும் காண்டாமிருகங்களுக்கு ஒரேயொரு கொம்பும் உண்டு. ஆனால் ஆசியாவின் சுமத்ரா தீவுகளில் வாழும் காண்டா மிருகங்களுக்கு இரட்டைக்கொம்புகளும் உள்ளன.

இதேவேளை, சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளன.

தற்போதும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஐந்து வகையான காண்டாமிருகங்களை 3 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆபிரிக்காவைச் சேர்ந்த வெள்ளை, கறுப்பு காண்டாமிருகங்கள். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும் காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. 

இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பிலுள்ளது. வெள்ளை காண்டாமிருகத்திற்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளது. 

ஆனால் கறுப்பு காண்டாமிருகத்தின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். வெள்ளை காண்டாமிருகங்கள் மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்டவை என இரு வகை காண்டாமிருகங்களும் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவை. 

மீதி உள்ள மூன்றில், இந்தியா, ஜாவாத் தீவுகளில் வாழும் காண்டாமிருகத்திற்கு ஒற்றை கொம்புள்ளது. இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய காண்டாமிருகமும் ஜாவா காண்டாமிருகமும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன. 

இவ்வற்றைவிட மிகச் சிறியதான சுமத்ரா காண்டாமிருகங்கள் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைக்கு, ஆபிரிக்க காண்டாமிருகங்களைப்போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளில் வாழ வல்லமையுடையதால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தறுவாயில் இவை உள்ளன.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة