பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...!பிரதமர் நரேந்திர மோடி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்படும் அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார். அதன்பின் அங்கிருந்து காரில் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு செல்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة