காஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...!காஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

காஷ்மீரைச் சேர்ந்த 8 வயதான சிறுமி ஆசிஃபா வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இருவர் செயற்பட்டதாக காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனால் காஷ்மீர் மாநிலத்தின் வனத்துறை அமைச்சரும் வர்த்தகத்துறை அமைச்சரும் தமது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் காணாற்போன சிறுமி ஆசிஃபா, ஒரு வாரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியை 8 பேர் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயதிற்குட்பட்ட சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமியை வழிபாட்டுத்தலமொன்றில் மறைத்து வைத்து பல முறை வன்கொடுமைக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல் தொடர்பில் 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

8 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة