இலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது...!கிறுக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்களை வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.

வழங்கப்பட்ட கால எல்லைக்குள் மத்திய வங்கி உள்ளிட்ட வணிக வங்கிகளுக்கு கிடைத்த சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்கள் வழங்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதி திணைக்களத்தின் அதிகாரி தீபா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கியின் தலைமை காரியாலயத்திலும் பிரதேச அலுவலகங்களிலும் மாற்றக்கூடிய சந்தரப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத்தாள்களை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளில் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக்கொள்ள முடியுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சிறிய கீறல்களுடனான நாணயதாள்களை தொடர்ந்தும் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்த முடியும்.

ATM இயந்திரத்தினூடாக இவ்வாறான நாணயத்தாள்கள் கிடைத்தால் அருகிலுள்ள வங்கிகளில் அதனை மாற்றிக்கொள்ள முடியுமெனவும் இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதி திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة