பலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன...!நாட்டின் சில பகுதிகளில் நிலவும் பலத்த மழைக் காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

உடவளவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் இன்று முற்பகல் பத்து மணியளவில் திறந்து விடப்பட்டன.

நிலவும் மழையுடனான வானிலையால், உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் பொறியியலாளர் சுஜீவ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

வான்கதவுகள் திறக்கப்படுவதால், நீர்த்தேக்கத்தை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஊடாக பார ஊர்திகளுடன் பயணிப்பதை தவிர்க்குமாறும் இலங்கை
மகாவலி அதிகார சபை சாரதிகளை வலியுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் சாரதிகள் கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை குக்குளே கங்க நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மலையக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்துவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது,.

சுமார் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடற்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வானிலை அதிகாரி மேலும் தெரிவிக்கின்றார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة