சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் உதவியுடன் மரவள்ளி ஆலை நிர்மாணிக்க திட்டம்...!நாட்டில் மரவள்ளி செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்கு இணையாக மரவள்ளி மா தயாரிக்கும் ஆலையொன்றை நிர்மாணிக்க சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் குழு முன்வந்துள்ளது.

குறித்த முதலீட்டாளர்கள் நேற்று (06) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களில் இந்த பயிர்செய்கையை பிரபல்யப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கீழ் சுமார் 6,000 ஹெக்டயர் காணியில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விவசாயிகளை மரவள்ளி பயிர்செய்கையில் ஈடுபடுத்தி, அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரவள்ளியை தொழிற்சாலையினூடாக மாவாக மாற்றி அதன் மூலம் சீனி உற்பத்தியை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முதலீட்டின் ஊடாக விவசாயத்துறையில் பெருமளவு தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீனி உற்பத்திக்காக செலவிடப்படும் பெருமளவு செலவைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டின் தொழில்நுட்பத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة