பொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...!பொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஷ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் 6 ஆம் நாள் இன்றாகும்.

இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டை கோதாவில் திவங்க ரணசிங்க போட்டியிட்டார்.

போட்டியின் மூன்று சுற்றுக்களிலும் வெற்றியீட்டிய திவங்க ரணசிங்க அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

குத்துச் சண்டை கோதாவில் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் நடத்தப்பட்டதால், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் வீர வீராங்கனைகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி அரையிறுதிப் போட்டியில் திவங்க ரணசிங்க தோல்வி அடைந்தால் அவருக்கு வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொள்ள முடியும்.

அவர் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்.

தெற்காசியாவின் வேகமான வீராங்கனையான ருமேஷிகா ரத்நாயக்க மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் அவர் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

200 மீற்றர் தூரத்தைக் ருமேஷிகா ரத்நாயக்க 23.4 மூன்று செக்கன்களில் கடந்தார்.

23.28 செக்கன்களில் 200 மீற்றர் தூரத்தைக் கடந்த இங்கிலாந்தின் Dina ASHER-SMITH முதலிடத்தைப் பிடித்தார்.

மகளிருக்கான 57 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டை கோதாவில் போட்டியிட்ட இலங்கையின் கோஷானி ஹன்சிக்கா அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

இதேவேளை 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலப்பு இரட்டையருக்கான பெட்மின்ட்டன் போட்டிகளில் இலங்கை குழாம் முன்னோடி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் திலினி ப்ரபோதிகா ஜோடி உகன்டாவின் Edwin EKIRING மற்றும் Shamim BANGI ஜோடியை சந்தித்தது.

இரண்டு சுற்றுக்களிலும் வெற்றி பெற்ற இலங்கை குழாம் முன்னோடி காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة